விருதுநகர்: கே.டி‌.ராஜேந்திர பாலாஜி மீதான பணமோசடி வழக்கு; 43 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட அவரின் உதவியாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது கடந்த 2021-ம் ஆண்டு விருதுநகர் குற்றப்பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. வழக்கு பதிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் கே.டி‌.ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, முன்னாள் அமைச்சர் கே.டி‌.ராஜேந்திர பாலாஜி திடீரென தமிழகத்திலிருந்து தலைமறைவானார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பணமோசடி வழக்கில், அவரைக் கைதுசெய்யும் பொருட்டு, காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தமிழகம் அல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் தேடிவந்தனர். இந்த நிலையில், சுமார் சுமார் 20 நாள்களுக்குப் பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி கர்நாடகாவில் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கைது சம்பவம் அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ராஜேந்திர பாலாஜி

இந்த வழக்கிலிருந்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டுமென்று கே.டி‌.ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளின்பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ஜனவரி 13-ம் தேதி திருச்சி சிறையிலிருந்து வெளியேவந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், அதுவரை தனது சொந்த ஊரான திருத்தங்கலில் தங்கியிருக்க போவதாகவும் தனது வழக்கறிஞர் மூலம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி‌.ராஜேந்திர பாலாஜி மீதான இந்த பணமோசடி வழக்கு தற்போது மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறை சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட (சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான) சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு குறித்து 43 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.