இந்தூர்: மத்திய பிரதேசம் இந்தூரில் புலம்பெயர்ந்தோருக்கான பிரவாசி பாரதிய திவஸ் 17-வது மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் சிவகுமார் வரதராஜு நாயுடு உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் முன்னிலையில் ஜெய்சங்கர் கூறியதாவது.
இந்தியாவில் வணிகம் தொடங்குவதற்கு வழிமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டு வருகின்றன. இதனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் நிறைய புதுமையான கண்டுபிடிப்புகள், புத்தாக்க தொழில்கள் வரவுள்ளன. வரலாற்று ரீதியிலான நெருக்கமான உறவை இந்தியாவும், மலேசியாவும் நெடுங்காலமாக பேணிக் காத்து வருகின்றன. இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான வர்த்தகம் 2,000 கோடி டாலரை தாண்டியுள்ள நிலையில், அது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தூய்மை பிரச்சாரத்தில் இந்தூர் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்த நகரத்தை சுற்றி வர சிறிது நேரம் செலவிட்டால் மாற்றத்தை தாமாக உணரலாம். அதனால்தான், உலக அளவில் பொருளதார நிலை மிகவும் கடினமாக இருக்கும் சூழ்நிலையிலும் கூட நாங்கள் 7 சதவீத வளர்ச்சியை தக்க வைப்போம் என உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.