கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் டாபிக், `அஜித் 62’ல் சந்தானம் நடிக்கிறார் என்பதுதான். மீண்டும் காமெடியனாக களமிறங்குகிறார் என பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
`துணிவு’ படத்தை அடுத்து அஜித், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் ப்ரீ புரொடெக்சன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நடிகர்களிடம் தேதிகள் கேட்டு பேச்சு வார்த்தையும் பரபரக்கிறது. இதில்தான் காமெடியனாக சந்தானம் நடிக்கப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. அஜித்துடன் `வீரம்’ படத்தில் நடித்திருந்தார் சந்தானம். அதன்பிறகு சந்தானம் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார். இது குறித்து சந்தானம் வட்டாரத்தில் விசாரித்தேன்.
“முழுக்கதையும் எழுதிய பிறகு, அஜித்திடம் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். பல இடங்களில் கதை பிடித்துப்போய் உற்சாகமாகி சிரித்த அஜித், “அதில் வரும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள்?” என இயக்குநரிடம் கேட்டிருக்கிறார். விக்கியும் ‘சந்தானம் சார் செய்தால் செமையா இருக்கும்’ எனச் சொல்ல, ‘கரெக்டான சாய்ஸ்’ எனக் கூறியிருக்கிறார் அஜித். அதன்பிறகு அஜித்தே, சந்தானத்திடம் பேசியதுடன், ‘விக்கி படத்தின் கதையை கேளுங்க’ எனச் சொல்லியிருக்கிறார். விக்னேஷ் சிவனின் ‘போடா போடி’ படத்தில் சந்தானம் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அஜித் சொன்ன பிறகு விக்னேஷ் சிவனும் சந்தானத்திடம் முழுக்கதையையும் சொல்லியிருக்கிறார்.
சந்தானமும் முழுக்கதையை கேட்டுவிட்டு, ‘அருமையான கதை… வாழ்த்துக்கள் விக்கி சார்’ என அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சந்தானத்திற்கு, அஜித்திடம் இருந்து போன் வந்திருக்கிறது. ”சார் நாம சேர்ந்து ஒர்க் பண்றோம். அந்த ரோலை நீங்க பண்ணணும்னு விரும்புறேன்” என்ற அஜித்தின் அன்புக்கட்டளையை சந்தானம் எதிர்பார்க்கவில்லை.
அதன்பிறகு லைகா புரொடெக்சன்ஸிலிருந்து தமிழ்க்குமரன் பேசியிருக்கிறார். சந்தானம், ஜீவா நடித்திருந்த `என்றென்றும் புன்னகை’ படத்தை தமிழ்க்குமரன் தான் தயாரித்திருந்தார். அப்போதிருந்த, அவரும் சந்தானமும் நெருங்கிய நட்பில் உள்ளார். இப்படி முக்கோண அன்பக் கதையாக மூன்று பக்கங்களில் இருந்தும் அன்பு ராக்கெட்டுகள் சீறிப் பாய்ந்ததிலும் ஓகே சொல்லியிருக்கிறார் சந்தானம் என்கிறார்கள்.
“ஹீரோவாக சந்தானம் இப்போது `கிக்’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதனையடுத்து அவர் `இந்தியா பாகிஸ்தான்’ ஆனந்த் இயக்கத்தில் இன்னமும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவரது ஹிட் படமான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் அடுத்த பாகமான `தில்லுக்கு துட்டு -3′ படத்தில் நடிக்கிறார். அதனை ராம்பாலா இயக்கவில்லை. சந்தானம் டீமில் உள்ளவர் தான் இயக்குகிறார்.
இன்னொரு விஷயத்தையும் சந்தானம் தரப்பில் சொல்கிறார்கள். அஜித் சாரின் பாசத்தினால் தான் அதனை மறுக்க முடியாமல் AK 62 படத்தில் சந்தானம் நடிக்கிறார். அதில் அவர் காமெடியனாக நடிக்கவில்லை. ஹீரோவுக்கு இணையான ஒரு ரோல் என்றும், இந்த படத்திற்குப் பிறகு வேறெந்த படத்திலும் காமெடியனாக நடிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் சொல்கிறார்கள்.