பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கையில்,”தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆளுநரின் உரை வாசிக்கப்படும் போது, திமுகவின் கூட்டணி கட்சியினர் தமிழகம் என்று சொல்லாட்சியை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னதற்காக ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டனர்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடனும் ஒரு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஆதி மனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ் தேன்,… மூதறிஞர் ஒழுக்க நெறிகள் முதலில் கண்டதும் தமிழகம் தான்…” என்று தமிழகம் என்ற தலைப்பிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதை வரிகளை நினைவு கூர்ந்து, நான் தமிழக அரசை கேட்கிறேன்… ஆளுநர் அவர்கள் தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது.
ஆளுநர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் சற்று முன்புவரை, திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பக்கத்தின் முகப்பிலே இருந்த வாசகம், “தலை நிமிருது தமிழகம், மனம் குளிருது தினம் தினம்”… ஆனால் அவசர அவசரமாக இந்த வாசகத்தை மாற்றி “தைத்திங்களில் தமிழர் பெருமை” என்ற பொருளற்ற வாசகத்தை பதிவிட்டுள்ளனர்.
திறனற்ற திமுக அரசு…
ஆகாத மாமியாரின் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல கவர்னர் அவர்கள் எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும், எதிர்மறையாக பேச வேண்டும் என்பதை கண்மூடித்தனமாக செய்து கொண்டிருக்கிறது, தமிழ்நாடு அரசு.
ஆளுநரின் தமிழகம் என்று சொல்லாடலை எதிர்த்து கிளர்ச்சி செய்வதில் வியப்பு ஒன்றும் இல்லை. திறனற்ற திமுக அரசு தன் குறைகளை எல்லாம் மறைக்க மக்களை திசை திருப்ப இப்படி உணர்வு ரீதியான பிரச்சனையை கிளப்புவது வாடிக்கையே.
பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை எல்லாம் ரேஷன் அதிகாரிகள் மூலம் வழங்காமல் அந்தந்த பகுதியில் உள்ள திமுக கட்சிக்காரர்கள் மூலம் கொடுக்க காரணம் என்ன? தமிழக முதல்வர் கொடுப்பது தமிழக அரசுப் பணமா? அல்லது திமுகவின் கட்சிப் பணமா?. பல பகுதிகளில் டோக்கன்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட காரணம் என்ன? பொதுமக்களின் எதிர்ப்பினை திசை திருப்புவதற்காக ஆளும் கட்சி, திட்டமிட்டு இந்த தமிழகம், தமிழ்நாடு என்ற புது பிரச்சினையை கிளப்புகிறது.
ஸ்டாலினும் தமிழகம் என்றுதான்…
மூச்சுக்கு 300 முறை தமிழக அரசு, தமிழக அரசு என்று சொல்லிக் கொண்டிருந்த மு.க. ஸ்டாலின், இனி தமிழக அரசு என்று சொல்லாமல் இருப்பதற்காக மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும். பயிற்சி எடுக்க வேண்டி இருக்கும்.
சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் நேரத்தில், அந்த மாநிலத்தின் ஆளும் கட்சி இதுவரை கடந்து வந்த பாதையின் விளக்கத்தையும், இனி செய்ய இருக்கும் திட்டங்களின் முன்னறிவிப்புகளையும், ஆளும் கட்சியினர் எழுதி, ஆளுநரிடம் கொடுத்து படிக்கச் சொல்வது மரபு. ஆக இன்று சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆர்.என்.ரவி, வாசித்த ஆளுநர் உரை என்பது திமுக அரசால் எழுதி வழங்கப்பட்ட உரையே தவிர கவர்னரின் சொந்த கருத்துக்கள் அதில் இடம்பெறவில்லை.
ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் ஆளும் கட்சியினரே ஆர்ப்பாட்டம் செய்தால் தங்கள் ஆட்சியை தாங்களே எதிர்ப்பதாக அமைந்து விடும் என்ற காரணத்தால் கூட்டணிக் கட்சியினரையெல்லாம் தூண்டிவிட்டு அவர்களையெல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது திமுக அரசு.
திமுக ஆட்சியில் இதுவரை எடுத்த நடவடிக்கைகளை இனி எடுக்கப் போகும் செயல்திட்டங்களை, ஆளுநர் விளக்கும்போது கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தால் திமுகவை அதன் கூட்டணி கட்சியினரே எதிர்ப்பதாகத்தானே அர்த்தம் கொள்ள முடியும்.
மௌன நாடகம்
அவர்களை தடுத்து ஆளுநர் உரையை தடையின்றி நடத்த வேண்டிய திமுகவினர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால் பச்சை குழந்தைக்கு கூட தெரியும் திமுகவினர் கூட்டணிக் கட்சியினரைத் தூண்டிவிட்டு, மௌனமாக ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கண் துடைப்பு நாடகத்தை தடுக்க வேண்டிய சபாநாயகர் அகமும் முகமும் மலர அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசு தங்கள் கட்சியின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் அவர்கள் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?.
ஆளுநர் அவர்களின் கருத்துக்களை, சட்ட சபைக் குறிப்பில் இருந்து நீக்கவோ, சேர்க்கவோ, தமிழக சட்டசபை சபாநாயகருக்கு அதிகார வரம்பு உள்ளதா?. கவர்னர் அவர்கள் பேசிய பின்னர், மரபிற்கு புறம்பாக முதல்வர் குறுக்கிட்டுப் பேசியதும், ஆளுநர் உரையை சட்டசபைக் குறிப்பில், எப்படி இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்துவதும் முற்றிலும் தவறானது.
ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில், ஆளுநர் உரையை படித்த பிறகு முதல்வர் பேசுவது மரபல்ல, ஆனால் ஆளுநர் அவையில் இருக்கும் போதே, ஆளுநர் மாண்புக்கு மரியாதை செலுத்தாமல், ஒலிபெருக்கி வழங்கப்படாத போதும் முதல்வர் பேசுவது தவறான முன்னுதாரணம். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்துகொண்டதால், ஆளுநரே அவையைவிட்டு வெளியேற நேரிட்டது.
ஆளுநரின் ஆட்சேபனை
ஆளுநரின் வரைவு உரை ஜனவரி 6ஆம் தேதி, அன்று அவருக்கு வழங்கப்பட்டது. அதற்கு, அடுத்த நாள், ஜனவரி 7ஆம் தேதி ஆளுநர் உரையின் சில பகுதிகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார். “தமிழ்நாடு தொடர்ந்து அமைதி மற்றும் அமைதியின் மாநிலமாகவும், வன்முறையில் இருந்தும் விடுபட்ட மாநிலமாகவும் உள்ளது” என்ற வாசகத்தை அரசு சேர்த்துள்ளது.
சமீபத்தில் கோவையில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் முயற்சி நடைபெற்றதைக் கண்ட பிறகும், பாஜக உறுப்பினர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் இல்லத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதைக் கண்ட பிறகும், பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மாநிலம் முழுவதும் நடைபெறுவதைக் கண்ட பிறகும், சில நாட்களுக்கு முன், பெண் காவலரை, திமுகவின் இளைஞரணியினர் துன்புறுத்திய சம்பவத்தை கண்டு தமிழகமே அதிர்ந்த பிறகும், தமிழகத்தின் தலைமகனான ஆளுநர், மக்கள் கருத்துக்கு மாறாக, தமிழகம் அமைதிப் பூங்கா என்று அவரால் எப்படி பொய்யுரைக்க முடியும்.
அதுமட்டுமின்றி, “மாநில அரசின் முயற்சியால்தான் இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என்ற வாசகத்தை தமிழக அரசு சேர்த்திருந்தது. அதையும் “மாநில மற்றும் மத்திய அரசின் முயற்சியால்” என்று மாற்ற வேண்டும் என்று கவர்னர் அறிவுறுத்தினார்.
தமிழே தெரியாத ஆளுநர் அவர்கள், தமிழ் மீது கொண்ட ஈடுபாட்டால், நல்ல தமிழில் பேச முயற்சிக்கும் போது, திமுக அரசின் தூண்டுதலால் அதன் கூட்டணிக் கட்சியினர் நடந்து கொண்ட விதமும், அதைத் தடுக்காத ஆளும் கட்சியினரின் விஷமத்தனமான அமைதியும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே” என தெரிவித்துள்ளார்.