கடந்த டிசம்பர் 30ஆம் தேதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது கார் சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரிஷப் பண்ட்டிற்கு மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக்காயதிற்காக அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. மேலும் கை, காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வருவதால் நடப்பாண்டிற்கான IPL தொடரில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசியக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையிலும் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் அனைத்து சிகிச்சை செலவுகளையும் பிசிசிஐ ஏற்கும் என்று தெரிவித்திருந்தது.
மேலும், IPL தொடர் மூலம் ரிஷப் பண்ட்டிற்குக் கிடைக்கக்கூடிய 16 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஒப்பந்த தொகையான ரூ.5 கோடி ஆகியவற்றையும் முழுமையாக அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் ரிஷப் பண்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறாவிட்டாலும் தனது ஆண்டு சம்பள தொகையை முழுமையாகப் பெறுவார்.