அதிமுக பொதுக்குழு வழக்கு | ஓபிஎஸ் தரப்பு ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்? – இபிஎஸ் தரப்பு வாதம்

புதுடெல்லி: “பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு. அப்படி இருக்கும்போது ஓபிஎஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கேட்க வேண்டும் என ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்?” என்று இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமாசுந்தரம், “அதிமுகவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ? அதுதான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது.

ஆனால் முன்னதாக அந்த பதவிகளை உருவாக்கியபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று சொல்லாத ஓபிஎஸ் தற்போது மட்டும் ஏன் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார்? கட்சிக்கு இரட்டை தலைமை இருந்தால் இருவருக்கும் இருவேறு கருத்து இருக்கும். அப்போது கட்சி தொடர்பாக ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும். அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவேதான் கட்சியை வழிநடத்தவும், கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஒற்றை தலைமை வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநித்துவம்தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள். எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு அடிப்படை உறுப்பினர்களின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும். அதிமுக பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் பொதுக்குழு எடுத்த முடிவுகளை கேள்விக்கு உட்படுத்துவதை ஏற்க முடியாது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டதும், கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல பொதுக்குழு உறுப்பினர்களால்தான்.

எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு. அப்படி இருக்கும்போது ஓபிஎஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கேட்க வேண்டும் என ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்?

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பங்கேற்ற 2460 உறுப்பினர்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5% ஆதரவாகும். தற்போதைய நிலையில் ஓபிஎஸ் தரப்பு கூறும், பொதுக்குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. கட்சிவிதி 19-ன்படி கட்சியின் உட்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பாக பொதுக்குழு விளங்குகிறது. பொதுக்குழுவின் முடிவு இறுதியானது, பொதுக்குழுவுக்கு முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் உள்ளது, கட்சியின் விதிகளில் மாற்றம் செய்யவும், விதிகளை நீக்க மற்றும் சேர்க்க முழு அதிகாரம் படைத்த அமைப்பாக பொதுக்குழு உள்ளது.

ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக செய்யப்பட்ட அறிவிப்பையும் ஓபிஎஸ் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் கையெழுத்தாகிய பொதுக்குழு அறிவிப்பில், தீர்மானங்கள் 3 முதல் 7 வரையிலான கருத்து அடிப்படையில், ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசிக்கபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டதால் அது அன்றோடு முடிவடைந்து விட்டது. எனவே, மேலும் நான்கு ஆண்டுகள் அந்த பொறுப்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை.

அமெரிக்காவில், கேப்பிட்டல் ஹில் என்ற அரங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் என்ன செய்தார்களோ? அதைத்தான் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் செய்தனர்” என்று வாதிட்டார். இபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், விசாரணையை புதன்கிழமைக்கு (ஜன.11) ஒத்திவைத்து உத்தரவிட்டனர். நாளைய தினம் அதிமுக கட்சி மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.