அரக்கோணம் அருகே பரபரப்பு தண்டவாளத்தில் விரிசல் நடுவழியில் நின்ற ரயில்கள்: பயணிகள் கடும் அவதி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்ட நிலையில், அரக்கோணம்- புளியமங்கலம் ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 7.45 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  உடனே, அரக்கோணம் மற்றும் மோசூர் ரயில் நிலையங்களுக்கு தெரிவித்து, இவ்வழியாக ரயில்களை இயக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மேல்பாக்கம் அருகே நிறுத்தப்பட்டது.

அதேபோல் வேலூர் கன்டோன்மென்ட் ரயில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் மோசூர் அருகே நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ்  உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று ஆய்வு செய்து, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை அரைமணி நேரம் போராடி சரி செய்தனர். இதையடுத்து, நிறுத்தப்பட்ட ரயில்கள் காலை 8.15 மணிக்கு பிறகு ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கடும் பனிப்பொழிவு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.