ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் நியமனம்: இயக்குநர் உத்தரவு

வேலூர்: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1400க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காலதாமதம் ஆவதால் மாணவர்கள் நலன் கருதி தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 19 முதுநிலை ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, பள்ளி மேலாண்மை குழு வழியே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேரடியாகவோ, தபால் வழியிலோ உரிய கல்வி சான்றுகளுடன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அனுப்ப வேண்டும். பின்பு, பள்ளி மேலாண்மை குழு வழியே, தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த பணிகளை வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் பதவிக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.