உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமத் நிலத்துக்குள் மூழ்கும் அபாய நிலையில் இருப்பதால் அங்கு வசிப்பவர்கள் அதிவேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. சாமோலி மாவட்ட நிர்வாகம் காலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து நிபுணர்களின் உயர் மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மத்திய அரசின் பேரிடர் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. புவியியலாளர் Piyoosh Rautela கருத்துப்படி, ஜனவரி 2 மற்றும் 3-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் வெடித்த நிலத்தடி நீர்நிலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர், நகரத்தில் உள்ள வீடுகள் மற்றும் பிற கான்கிரீட் கட்டமைப்புகளில் விரிசல்களை உருவாக்கியது.
இந்த நிலத்தடி நீர் ஆதாரத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் நானூறு முதல் ஐந்நூறு லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. இந்த பனிக்கட்டி நீரால், புவியியல் பாறையின் அரிப்பு ஏற்படுகிறது என்றும் இருப்பினும், இந்த நிலத்தடி நீர் ஆதாரத்தின் அளவு என்ன, அது ஏன் திடீரென வெடித்தது என்பது தெரியவில்லை என்றும் புவியியலாளர் Piyoosh Rautela தெரிவித்துள்ளார்.