உத்தரகாண்டில் நாளுக்கு நாள் மோசமடையும் நிலைமை ஜோஷிமத்தில் 738 கட்டிடத்தில் விரிசல்: வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைகிறது. விரிசல் விழுந்த கட்டிடங்களின் எண்ணிக்கை நேற்று 738 ஆக அதிகரித்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரத்தில் சமீபகாலமாக சாலைகள், கட்டிடங்களில் விரிசல் விழுந்து வருகிறது. இதனால் இந்த மலை நகரமே இடிந்து, மண்ணில் புதையும் அபாயம் நிலவி வருகிறது. கடந்த ஆண்டே இதுதொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் ஆளும் பாஜ அரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்ததால், இன்று ஜோஷிமத் நகர மக்கள் விபரீதமான நிலையில் உள்ளனர். இந்நிலையில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.

‘நேற்று முன்தினம் 678 கட்டிடங்களில் விரிசல் இருந்த நிலையில், நேற்று அது 738 ஆக அதிகரித்துள்ளது. 86 வீடுகள் வாழ தகுதியற்றவையாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுவரை 131 குடும்பங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தினசரி அடிப்படையில் கட்டிட விரிசல்களின் பாதிப்பை கண்காணிக்குமாறு தலைமை செயலாளர் சாந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மோசமாக விரிசல் விழுந்த வீடுகளை உடனடியாக இடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வரை 200க்கும் மேற்பட்ட வீடுகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சிவப்பு குறியீட்டை கட்டிடங்களில் குறித்துள்ளனர்.
அதே போல, பிரபலமான 2 ஓட்டல்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை இடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், முறையான இழப்பீடு தராமல் ஓட்டலை இடிக்க கூடாது என நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதேபோல நகரின் பல இடங்களிலும் வீடுகளை இடிக்க பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஜோஷிமத் பாதிப்பை இயற்கை பேரிடராக அறிவித்து முறையான இழப்பீட்டை அறிவிக்காமல் வீடுகளை அரசு இடிக்கக் கூடாது என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, விரிசல் அதிகளவில் விழுந்த ஒரு ஓட்டலை இன்று அதிகாரிகள் இடிக்க உள்ளனர். இதுபோன்ற பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்காவிட்டால் அவை இடிந்து, அருகில் உள்ள வீடுகளும் பாதிக்கப்படும் என அதிகாரிகள் விபரீதத்தை கூறி வருகின்றனர். இதனால் ஜோஷிமத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.