உலகத்தின் திறன் தலைநகராக இந்தியா உருவெடுக்கும் – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: உலகத்தின் திறன் தலைநகராக இந்தியா உருவெடுக்கும் என்று வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி பிரவாசி பாரதிய திவஸ் தினம் (வெளிநாடுவாழ் இந்தியர் தினம்) கொண்டாடப்படுகிறது. தேசத் தந்தை காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய நாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஓர் இந்திய நகரத்தில் பிரவாசி பாரதிய திவஸ் தின மாநாடு நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு மாநாடு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சுமார் 70 நாடுகளை சேர்ந்த 3,200-க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தூய்மையின் தலைநகராக இந்தூர் விளங்குகிறது. அதோடு சுவைகளின் தலைநகரமாகவும் இந்தூர் திகழ்கிறது. உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. சர்வதேச அரங்கில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒழுக்கம், அமைதியை விரும்பும் மக்கள் என்று இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டப்படுகிறது.

வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஒவ்வொருவரும் இந்திய தூதர்கள் ஆவர். இந்தியாவின் யோகா, ஆயுர்வேதம், கைவினைப் பொருட்கள், கைத்தறி, சிறுதானியங்களை உலகம் முழு வதும் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.

உலகின் டிஜிட்டல் பரிவர்த் தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் 100 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவின் வலிமை, சாதனைகளை உலக நாடுகள் பிரமிப்போடு பார்க்கின்றன. இந்தியா மீதான உலகத்தின் எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது. இந்த நேரத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பொறுப்பும் அதிகரித்து உள்ளது.

மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியர்கள், அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது இந்திய சிறுதானிய உணவு வகைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் வசிக்கும் நாடுகளில் நமது நாட்டின் சிறுதானிய உணவு வகைகளின் சிறப்புகளை எடுத்துரைக்க வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தை இந்தியா திறம்பட எதிர்கொண்டது. உள்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காட்டிய வழியை இப்போது நாம் பின்பற்றுகிறோம். இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.

உலகின் அறிவு மையமாகவும், திறன்சார் மையமாகவும் இந்தியா மாறி வருகிறது. உலக நாடுகளில் இந்திய இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்திய இளைஞர்களின் அறிவால், திறனால் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற முடியும். உலகத்தின் திறன் தலைநகராக இந்தியா உருவெடுக்கும்.

100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகின் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமான குடும்பங்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன. வெளிநாடுகளில் வளரும் இந்திய குழந்தைகள் தங்கள் பெற்றோரின் தாய் நாட்டை குறித்து அறிந்து கொள்ள அதிக ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இந்தியாவின் அருமை, பெருமைகளை பெற்றோர் போதிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.