இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
உதவ மறுக்கும் உலக நிதி அமைப்பு: பாகிஸ்தானில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி உதவி அளிக்க சர்வதேச நாணய நிதியம் மறுத்துவிட்டது. நிதி உதவி கிடைத்தால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் எனும் நிலையில் உள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. எனினும், இதற்கு முந்தைய வாக்குறுதிகளை அந்நாடு நிறைவேற்றாததால், கூடுதல் நிதி உதவி அளிக்க சர்வதேச நாணய நிதியம் மறுத்து வருகிறது.
சொற்ப அளவில் உள்ள அந்நிய செலாவணி: டிசம்பர் 30, 2022 அன்று முடிவடைந்த வாரத்தில் பாகிஸ்தானின் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி 5.576 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.557.60 கோடி) குறைந்துவிட்டது. இது 3 வாரங்களுக்கு இறக்குமதி செய்வதற்கு மட்டுமே போதுமான தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரித்த அத்தியாவசியப் பொருட்கள்: பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும், தொடர் இறக்குமதிக்கான வாய்ப்பு குறைந்து வருவதாலும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அத்தியாவசிய உணவுப் பொருளான கோதுமை ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது. அதுவும் போதுமான அளவு கிடைக்காத நிலை உள்ளது. இதனால், கோதுமை விற்கும் இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஒருவர் உயிரிழப்பு: சிந்து மாகாண அரசு மானிய விலையில் மாவு விற்பனையை மேற்கொண்டுள்ளது. மிர்புர்காஸ் மாவட்டத்தில், சமீபத்தில் லாரிகளில் தலா 10 கிலோ எடையுள்ள மாவு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ மாவு ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 வயது தொழிலாளி ஹர்சிங் கோல்ஹி என்பவர் உயிரிழந்தார். இவருக்கு, 7 குழந்தைகள் உள்ளனர். பிள்ளைகளின் பசியைப் போக்க உணவுக்காக போராடி தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து கோதுமை இறக்குமதி: பாகிஸ்தானில் கோதுமை தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு உதவும் நோக்கில் 3 லட்சம் டன் கோதுமையை ரஷ்யா அளித்துள்ளது. ரஷ்யாவின் 2 கப்பல்கள் மூலமாக இந்த கோதுமை நேற்று கராச்சி துறைமுகம் வந்து சேர்ந்தது. வரும் மார்ச் 30-ம் தேதிக்குள் மேலும் 4 லட்சம் கோதுமையை அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது.