இந்தியாவில் பல மாநிலங்களில் குளிர்காலம் உச்சநிலையை அடைந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்களை உறைய வைக்கும் விதமாக குளிர் அலை வீசி வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், எல்.பி.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அளித்துள்ள புள்ளிவிவர அறிக்கையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 5 நாட்களில் மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக 98 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 98பேரில், 44 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர், 54 நோயாளிகள் சிகிச்சைக்கு முன்பே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கான்பூரில் உள்ள லக்ஷ்மிபத் சிங்கானியா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் கார்டியாக் சர்ஜரி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஒரு வாரத்தில் 723 இதய நோயாளிகள் மருத்துவமனையின் அவசர மற்றும் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்துள்ளதாகவும், கடுமையான குளிரால் பாதிக்கப்பட்ட 14 நோயாளிகள், கடந்த சனிக்கிழமையன்று மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆறு பேர் இதய நோய் மையத்தில் சிகிச்சையின் போது இறந்ததாகவும், வேலை செய்யும் நிறுவனத்தில் 8 பேர் இறந்தனர் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்கு பிறகு இந்தியாவில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் மாரடைப்புகள் மருத்துவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இது குறித்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசியர் ஒருவர் கூறுகையில், “இந்த குளிர் காலத்தில் மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டும் வராது. டீன் ஏஜ் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
சூரிய உதயத்திற்கு முன் குளிர்காலத்தில் வெளிப்புற காலை நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டுமென இருதயநோய் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் இந்த காலநிலையில் குளிரில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.