புதுடெல்லி: மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்தை எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர் வாதத்தில்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் மனுதாரர் தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
அதனை ஏற்க முடியாது. மேலும் மனுதாரர் அஸ்வினி உபாத்யா பாஜ கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளராக இருப்பதால் இந்த வழக்கு என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். மேலும் இந்த வழக்கின் மனுதாரர் மனுவின் சாராம்சத்தில் தமிழகத்தை தான் அதிகப்படியாக சுட்டிக்காடி உள்ளார். தமிழகத்தில் கடந்த 2002ம் ஆண்டு மதமாற்றங்களை தடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அது 2006ம் ஆண்டில் மாநில சட்டமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் மனுதாரர் அஸ்வினி உபாத்யா கூறியுள்ள அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும்.
கட்டாய மத மாற்றம் தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. ஒன்றிய அரசு கூட அதில் எந்த தலையீடும் செய்ய முடியாது. மேலும் மாநிலங்களுக்கு எதிராக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள்,‘‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரை வெங்கட்ரமணியை நியமிக்கப்படுகிறார்.
அதேநேரத்தில் இந்த மனுவை கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான வழக்கு என்பதற்கு பதிலாக ‘‘மத மாற்றம் தொடர்பானது” என மாற்றப்படுகிறது.
மேலும் சர்ச்சையான மனுவை தாக்கல் செய்த பிரதான மனுதாரரான பாஜவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாவை இந்த வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.