கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்திரப்பதிவு அலுவலகம் எண் 2ல் கடந்த மாதம் 5ம்தேதி இந்த பத்திர பதிவு நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த இளவரசன் மகன் கோபி என்பவர், கள்ளக்குறிச்சி ஆஸ்பிட்டல் ரோடு பகுதியை சேர்ந்த ராமைய்யா மனைவி சேதுமணி அம்மாளுக்கு சர்வே எண் 5ன் கீழ் இரண்டரை சென்ட் நிலம் எழுதி கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 33 ஆயிரத்து 600. இதனை கள்ளக்குறிச்சி பத்திர பதிவாளர் கதிரவன் பதிவு செய்து கொடுத்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்த பிறகு, பதிவுகள் குறித்து ஆய்வு செய்த போது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திரம் பதிந்து கொடுத்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திர பதிவாளர் (நிர்வாகம்) ரூபியாபேகம், சென்னை பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் பங்களாவை பதிவு செய்து கொடுத்த கள்ளக்குறிச்சி பத்திரப்பதிவாளர் கதிரவனை பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.