கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரிடம் கோவையில் என்ஐஏ விசாரணை

கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் கோவையில்  விசாரணை நடத்தினர். கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்தது. இதில் உக்கடம் பகுதியை சேர்ந்த துணி வியாபாரி ஜமேஷா முபின் (29) இறந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை வரும் 17ம் தேதி வரை காவலில் விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 7ம் தேதி முதல் 6 பேரையும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அவர்களை கோவைக்கு அழைத்து வந்து, அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, கோவையில் எந்த மாதிரியான சதி திட்டம் மேற்கொள்ள முடிவு செய்தீர்கள்?, எங்கே, என்ன வெடி பொருட்கள் வாங்கினீர்கள்?, இதற்கு எதாவது அமைப்பை சார்ந்தவர்கள் உதவி செய்தார்களா?, பின்னணியில் உள்ள நபர்கள் யார்? மாஸ்டர் பிளான் போட்டு தந்தது யார்?, எந்தெந்த இடங்களில் வெடி வைக்க யார் யார் முடிவு செய்தார்கள்?, எத்தனை பேர் வெடி வைக்க ஈடுபாடு காட்டினார்கள்? யார் யாரிடம் செல்போனில் தொடர்பு வைத்திருந்தார்கள்  என 6 பேரிடமும் விசாரித்தனர். மேலும், இந்த 6 பேரும் சத்தியமங்கலம், கடம்பூர் காடுகளில் உயிரிழந்த ஜமேசா  முபினுடன் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். இதனால், ஓரிரு நாட்களில் இவர்களை கடம்பூர், ஆசனூர் வனத்திற்கு அழைத்து சென்று கூட்டம் நடத்திய இடத்தையும், அவர்கள் தங்கியிருந்த பகுதியையும் பார்வையிட்டு விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.