கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களை, தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்கும்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளை சீல் வைக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும் எனவும், அனைத்து பேருந்துகளையும் சோதனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், சோதனைக்கு பஸ் நிறுத்தாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய நிரந்தர படைகளை அமைக்க வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.