சென்னை 46-வது புத்தகக் காட்சி கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில், அங்கே கடந்த 45 ஆண்டுகளாக காத்து வந்த மவுனத்தை உடைத்திருக்கிறது ‘குயிர்’ பப்ளிஷிங் ஹவுஸ் (Queer Publishing House).
பால்புதுமையினர் குறித்த புரிதலையும், அவர்கள் கடந்து வந்த பாதையும் மக்களிடம் உரையாடுவதற்காக ஏராளமான புத்தகங்களுடன் அரங்கு எண் 28-ல் அமைந்துள்ள குயிர் பப்ளிஷிங் ஹவுஸ் கடந்த சில நாட்களாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பால் புதுமையினர் அரங்கு சார்ந்தும், அவர்களது புத்தகம் சார்ந்தும் பபாசி அமைப்பு சற்று கடுமையுடன் அணுகுவதாகவும், எனினும் தற்போது அப்பிரச்சினை சற்று முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார் திருநங்கைகள் செயற்பாட்டாளர் கிரேஸ் பானு.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலிடம் அவர் கூறும்போது, “புத்தகக் காட்சி தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்தே அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது என்ற கெடுபிடிகள் எங்களுக்கு போடப்பட்டன. இரண்டாவது நாள் எங்கள் அரங்கிற்கே வந்த பபாசி அதிகாரி ஒருவர், இந்த பேனர் ஏன் இங்கு இருக்கிறது… ஏன் இம்மாதிரியான புத்தகங்களை எல்லாம் வைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டார். ஏன் உங்கள் அரங்கில் இவ்வளவு கூட்டம் உள்ளது.. ஏன் அனைவரும் இங்கு வந்து புகைப்படம் எடுக்கிறார்கள், நீங்கள் நடைபாதையில் நிற்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார்கள். எங்கள் அரங்கை வேறு இடத்தில் மாற்ற புது அரங்கும் போட்டார்கள். இதனைத் தொடர்ந்துதான் சமூக வலைதளத்தில் எனது புகாரை தெரிவித்தேன்.
பின்னர் இப்பிரச்சினையில் அமைச்சர்கள் எல்லாம் தலையிட்டு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு கூட பபாசி அமைப்பை சேர்ந்த ஒருவர் வந்து ‘எல்லாம் சரி, நீங்கள் அணியும் ஆடைகளை மட்டும் பார்த்து கொள்ளுங்கள்’ என்றார். இதற்கும் ஆடைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை. எல்லாவற்றைவிட நாங்கள் அனைவரும் நாகரிகமாகவே ஆடைகள் அணிந்திருந்தோம். எங்கள் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் உள்ளன. சரி, நாங்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று கேட்டபோது ‘புடவை மட்டும் கட்டாதீர்கள்’ என்று கூறினார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவை எல்லாம் எங்களுக்கு அதிருப்தியை அளித்தது.
இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் எங்களுக்கு இந்தப் புத்தகக் காட்சியில் மக்கள் ஆதரவு பலமாக உள்ளது. வாசகர்கள் மிகுந்த பாசிடிவ்வாக இருக்கிறார்கள். புத்தகத்தின் மீது நிறைய ஆர்வமாக இருக்கிறார்கள். மூன்று நாட்களில் மட்டும் நாங்கள் 2,000 புத்தகங்களை விற்றுவிட்டோம். இவை எல்லாம் எங்களுக்கு மிகப் பெரிய சாதனை. இவை எல்லாம்தான் பேசப்பட வேண்டும். இவை எல்லாம் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. எங்களை உற்சாகப்படுத்தாமல் குறை கூறுகிறார்கள்.
புத்தகப் பதிப்பகத் துறைக்கு வந்த பிறகு நாங்கள் செய்ய வேண்டியது இன்னும் ஏராளமாக உள்ளதை அறிந்தோம். மொழிபெயர்ப்பு நிறைய செய்ய வேண்டி உள்ளதை உணர்ந்தோம். இவ்வாறு அறிவு சார்ந்த முன்னெடுப்பில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சின்னச் சின்ன விஷயங்களுக்கு சண்டையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.
கிரேஸ் பானுவின் சிந்தனைகள் புத்தகம், RIP புத்தகம், எண்ணிலிருந்து பார் (கவிதைத் தொகுப்பு), ஓர் கலையின் கவிதைகள், கல்கி சுப்பிரமண்யம் புத்தகம், லிவிங் ஸ்மைல் வித்யா புத்தகம் இவை எல்லாம் புத்தக கண்காட்சியில் அதிகம் வாங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதனை நாங்கள் சிறப்பாக செய்ய வேண்டும். நான் ஒரு வேண்டுகோளை மட்டுமே வைக்கிறேன். பபாசி மட்டுமல்ல, யாரும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். எங்கள் பணியை செய்ய விடுங்கள்” என்றார் கிரேஸ் பானு.