மாமல்லபுரம்: ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தமிழக கலாசாரம் குறித்து விளக்கவும், கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும் ஒன்றிய அரசு அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தோனேசியா நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது, விதிமுறைபடி அடுத்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த டிசம்பர் 1ம்தேதி அதிகாரப்பூர்வமாக ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. இதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள 100 நினைவு சின்னங்களை ஜி20 லோகோவால் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில், மாமல்லபுரத்தில் பல்லவர்கள் கைவண்ணத்தில் செதுக்கிய புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் ஜி20 மாநாடு லோகோவால் தேசிய கொடி கலரில் ஒளிர்ந்தது.
ஜி20 மாநாடு இந்தமாத இறுதியில் தொடங்குகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜி20 மாநாடு நடக்கிறது. குறிப்பாக, சென்னையில் தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஐஐடி என 3 இடங்களில் வரும் 31 மற்றும் பிப்ரவரி 2ம்தேதி 2 நாட்கள் நடக்கிறது. இதில், பங்கேற்க 20 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வரும் 30ம்தேதி சென்னை வந்து, பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்குகின்றனர். இவர்கள், பிப்ரவரி 1ம்தேதி மாமல்லபுரம் புராதன சிற்பங்களை கண்டு ரசிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் மாமல்லபுரம் வரும் 20 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, தமிழக கலாசாரம், கரகாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, பல்லவர் சிற்பங்களின் வரலாறுகள் குறித்து விளக்கி கூறுதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்ய ஜி20 ஒருங்கிணைப்பாளர் சைதன்ய பிரசாத், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் நீத்தா பிரசாத் மற்றும் 12 பேர் கொண்ட குழுவினர் புராதன சின்னங்கள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின்போது, தமிழ்நாடு பாதுகாப்பு எஸ்பி சாமிநாதன், செங்கல்பட்டு எஸ்பி பிரதீப், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து, தொல்லியல் அலுவலர் முகமது இஸ்மாயில், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.