டெல்லி பறக்கும் எம்பிக்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக நெருக்கடி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் புகார் தெரிவிக்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும் இடையே தொடக்கம் முதலே ஏழாம் பொருத்தமாக உள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது.

அண்மையில், “தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது மிகச் சரியாக இருக்கும்,” என, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. இதற்கிடையே, நடப்பு 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். அப்போது திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற வார்ததைகளை படிக்காமல் புறக்கணித்தார்.

இதற்கு ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது அவை மீறல் என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஏற்கனவே டெல்லியில் தான் இருக்கிறார். எனவே, அவர் சார்பில் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க நாளை அனுமதி கிடைத்தால், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்பிக்கள் சந்திப்பார்கள். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.