தமிழக அரசின் கண்துடைப்பு உத்தரவு : கட்டண கொள்ளைக்கு வழிவகுக்கும் நாடகம்

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு படங்கள் நாளை(ஜன., 11) வெளியாகும் நிலையில் ஜன., 13 முதல் 16 வரை சிறப்பு காட்சிகளை ரத்து செய்வதாக அரசு உத்தரவிட்டுள்ளது. தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதையாக நாளையும், நாளை மறுநாளும் கட்டண கொள்ளைக்கு வழி ஏற்படுத்திவிட்டு 13ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகளை விதிப்பது அரசின் கட்டுக்கதையாக இருக்கிறது.

இந்த பொங்கலுக்கு அஜித்தின் ‛துணிவு', விஜய்யின் ‛வாரிசு' படங்கள் நாளை வெளியாகின்றன. இதையொட்டி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதுடன் டிக்கெட் கட்டண கொள்ளையும் அரங்கேறி வருகிறது. அதிக விலையில் டிக்கெட் விற்க கூடாது என பெயரளவில் அரசு ஆணை வெளியிட்டாலும் அதை முழுமையாக அதிகாரிகள் தியேட்டர்களில் சென்று ஆய்வு செய்வது கிடையாது. அதிலும் சிறப்பு காட்சிக்கு அரசு கொடுக்கிறது என்றால் 5 அல்லது 6 காட்சிக்கு அனுமதி அளிக்கும். ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை நள்ளிரவு காட்சிகள் நடக்கின்றன.

நாளை வெளியாகும் இரண்டு படங்களில் துணிவு படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சியும், வாரிசு படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியும் திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் கட்டணமாக ஒவ்வொரு ஊருக்கு தகுந்த படி ரூ.500 முதல் 2500 வரை விற்கப்படுகிறது. இது துணிச்சலுடன் நடக்கும் உச்சபட்ச சட்டவிரோத செயல். மேலிடத்து அரசியல் வாரிசின் ஆதரவால், இந்த அத்துமீறலை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

கண்துடைப்பு உத்தரவு
இந்நிலையில் பெயரளவில் இன்று(ஜன., 10) அரசு ஆணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ஜன., 13 முதல் 16 வரை வாரிசு, துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க கூடாது, அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க கூடாது, கட்-அவுட் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாது, பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்கள் விலையை அதிகமாக வைத்து விற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி விற்கப்பட்டால் அது பற்றி சம்பந்தப்பட்ட நபர் புகார் தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

துணிவு படம் நள்ளிரவு 1மணிக்கும், வாரிசு படம் அதிகாலை 4மணிக்கும் திரையிடப்படுகின்றன. டிக்கெட் கட்டண கொள்ளை நாளையும், நாளை மறுநாளும் தான் நடக்கும். அரசு உத்தரவு ஜன., 13 முதல் தான் அமலுக்கு வருகிறது. அதற்குள் வசூலை அள்ளி விடுவார்கள். அரசு உத்தரவு என்பது வெறும் கண்துடைப்பு நாடகம்.

கட்டண உயர்வுக்கு வழி செய்யும் அரசு
சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதிக்கலாம். ஆனால் டிக்கெட் கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என அரசு கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். அதிக விலையில் விற்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு குறைவான காட்சிகளை வழங்கி அதற்கான டிமாண்ட்டை அதிகப்படுத்தி அதிக கட்டண கொள்ளைக்கு அரசே வழிவகை செய்கிறது. இதனால் பெரும்பாலும் தியேட்டர்களில் கட்டணம் விண்ணை முட்டுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.