கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் அஞ்சு ஸ்ரீ பார்வதி . இவர் புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி காசர்கோடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குழிமந்தி என்ற பிரியாணியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஞ்சு ஸ்ரீ பார்வதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடகத்தின் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜன.07 காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார். தரமற்ற உணவால் கல்லூரி மாணவி உயிரிழந்தது தெரியவந்தால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் எலி மருந்து விஷம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அஞ்சு ஸ்ரீ பார்வதியின் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தியதில், அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவரது செல்போனை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அஞ்சு ஸ்ரீ பார்வதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.