அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை வெளியாகின்றன.இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது.
ஒருபக்கம் தியேட்டர்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. மறுபக்கம் ரசிகர்கள் கோயில் கோயிலாக படியேறி வருகின்றனர். இந்நிலையில் திரைத்துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் காலை 5 மற்றும் 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் அனுமதியில்லை. அரசி நிர்ணயித்த டிக்கெட் விலையை விட அதிகமாக விற்கும் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திரையரங்குகளுக்கு வெளியே பெரிய பேனர்கள் அமைத்து பால் ஊற்றுவது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்காதது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு நாளை வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அஜித் தரிசனம் தான் ரசிகர்களுக்கு என்பது போல மிட் நைட் 1 மணிக்கே துணிவு படத்தை திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் மட்டுமின்றி நாளைய தினத்துக்கே மொத்தமாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்நிலையில், புதுச்சேரியில் நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் நள்ளிரவு காட்சியை ரத்து செய்தனர். அதிகாலை 5 மணிக்கு திரையிட மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கனவே முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக முறையிட்ட நிலையில், நள்ளிரவு காட்சிக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.