டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர நகரமான ஜோஷிமத் சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருகிறது. சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வரும் ஜோஷிமத் நகரம் மோசமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கிறது.
எனவே, இங்கு அடிக்கடி நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் ஏற்படுவது சகஜம். இந்நிலையில்தான், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில நாட்களாக ஜோஷிமத் பகுதியில் அடுத்தடுத்து பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்து வருகின்றன.
தற்போது ஜோஷிமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளும், சாலைகளும் புதைந்துள்ளன. இந்நிலையில், கடந்த 1976-ம் ஆண்டிலேயே ஜோஷிமத் நகரம் எதிர்காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மிஸ்ரா கமிஷன் வெளியிட்ட அறிக்கை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த அறிக்கையில், ஜோஷிமத் நகரில் வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற வேண்டும்; என்னென்ன திட்டங்களை செயல்படுத்தக் கூடாது; எந்த இடங்களில் வீடுகளை அனுமதிக்கக் கூடாது என்பன போன்ற எச்சரிக்கைகளை அந்த கமிஷன் தெரிவித்துள்ளது. ஆனால் அதையும் மீறி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த நகரம் புதையுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை, பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக மலைப்பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன. இது இந்த மண்டலத்தின் நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்று இமயமலையின் டெக்னானிக்ஸ் நிபுணரும், கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள என்ஐஏஎஸ் மையத்தின் புவியியல் நிபுணருமான சி.பி.ராஜேந் திரன் எச்சரிக்கை செய்துள்ளார்.
அளவுக்கு அதிகமான கட்டுமானப் பணிகள், நகரமயமாக்கல் திட்டங்கள், நாள்தோறும் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக ஜோஷிமத் நகரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டில் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுமார் 5 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
ஜோஷிமத் நகரத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு மூத்த அதிகாரி ஒருவர் அனுப்பியுள்ள அறிக்கை: சுமார் 25,000 மக்கள் தொகை கொண்ட ஜோஷிமத் நகரில் குறைந்தது 25% பகுதி நிலச்சரிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரத்தை அறிய ஒரு ஆய்வு நடத்தப்படவேண்டும். நைனிடாலுக்கு 2017-ல் 9.1 லட்சம் பேரும், 2018, 2019-ம் ஆண்டுகளில் 9.3 லட்சம் பேரும், 2020-ல் 2.1 லட்சம் பேரும், 2021-ல் 3.3 லட்சம் பேரும் வருகை தந்துள்ளனர். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து இமாலய சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பை (ஹெஸ்கோ) சேர்ந்த அனில் ஜோஷி கூறியதாவது:
மலைப்பிரதேச நகரங்களின் நிலைகுறித்து அறிவியல் ஆய்வு நடத்த வேண்டும். 1976-ம் ஆண்டில், ஜோஷிமத்தில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே வசித்தனர். அந்த எண்ணிக்கை இப்போது 25,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை அலட்சியம் காட்டியதால் ஜோஷிமத்துக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நகருக்குக் கீழே ஒரு ஆறு ஓடுகிறது. அதுகுறித்து யாரும் கவலைப்படவில்லை. ஜோஷிமத்தில் நகரமயமாக்கல் வேகம் பெறுகிறது. நகரத்தில் கட்டுமானப் பணிகள் குறித்து தீவிரமான ஆய்வுக்குப் பிறகே அனுமதி அளிக்கவேண்டும். சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் அவர்களுக்கான அடிப்படைகட்டமைப்பு வசதிகளுக்காக நகரமயமாக்கல் நடைபெறுகிறது. அது தடுக்கப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சமூகங்களுக்கான சமூக வளர்ச்சி அமைப்பின் நிறுவனர் அனூப் நவுட்டியால் கூறும்போது, “இந்த விவகாரத்தில் நாம் இப்போது விழிப்புடன் இருக்கவில்லை என்றால், ஜோஷிமத் அழிந்துவிடும். ஜோஷிமத் போன்ற பல சம்பவங்கள் உத்தராகண்டில் நடக்கக் காத்திருக்கின்றன’’ என்றார்.
68 வீடுகளில் இருந்து மக்கள் இடமாற்றம்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜோஷிமத் நகரில் இடிந்து விழும் நிலையில் இருந்த 68 வீடுகளில் இருந்த மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தற்போது பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அபாயகரமான மண்டலம் என வரையறுக்கப்பட்டுள்ள இடத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள மக்களையும் இடமாற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஜோஷிமத்தில் உள்ள மக்களையும், சொத்துகளையும் பாதுகாப்பதற்கு உத்தராகண்ட் அரசு முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.மேலும் ஜோஷிமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் சமோலி மாவட்ட ஆட்சியர் குரானா தெரிவித்துள்ளார்.