ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
அண்மையில், விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது போதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது ஏர் இந்தியா.
ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாக பெண் பயணி ஒருவர் ட்விட்டரில் ஆதாரத்துடன் புகார் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் ஏர் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தை ‘டேக்’ செய்து வெளியிட்டு உள்ள அவர், பயணிகளுக்கு கல் இல்லாமல் சாப்பாடு வழங்குவதை உறுதி செய்ய ஏர் இந்தியாவிற்கு பணம் தேவையில்லை. ஏஐ 215 விமானத்தில் எனக்கு வழங்கப்பட்ட உணவில் இது தான் கிடைத்தது. விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. இது போன்ற அலட்சியத்தை ஏற்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.
பெண் பயணியின் இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகவே, ஏர் இந்தியா நிர்வாகம் அவருக்கு அளித்த பதிலில், ”இந்த பிரச்சினை கவலைக்குரியது. இதனை சம்பந்தப்பட்ட உணவு வழங்கும் குழுவினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இது குறித்த தகவல் விரைவில் தெரிவிக்கிறோம். இதனை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவரும் ஏர் இந்தியா நிர்வாகத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தவற விடாதீர்: அப்போ ஏர் இந்தியா.. இப்போ எமிரேட்ஸ்.. போதை ஆசாமிகளால் விமானத்தில் தொடரும் அட்டூழியம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM