கும்பகோணம்: தஞ்சாவூர் அருகே நிலத்தகராறில் பாமக பிரமுகரை சரமாரி வெட்டிக்கொன்ற தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேலானமேடு கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (53). விவசாயியான இவர், பாமக முன்னாள் பேரூர் நகரத்தலைவர். இவரது மனைவி வனிதா (42). இவர்களுக்கு ஸ்ரீராம் (25) என்ற மகனும், ஸ்ரீமதி (22) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருஞானசம்பந்தத்திற்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் ராஜேந்திரன் (55) என்பவருக்கும் நிலத்தகராறில் கடந்த 15 வருடங்களாக முன் விரோதம் இருந்துள்ளது. இதுதொடர்பாக, சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக சோழபுரம் போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரன், அவரது மகன் மணிகண்டனை (21) கைது செய்தனர்.
தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மண்ணியாற்றங்கரை இரட்டைப்பாலம் அருகே பைக்கில் வீட்டிற்கு சென்ற திருஞானசம்பந்தத்தை வழிமறித்த ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த திருஞானசம்பந்தத்தை அப்பகுதியினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை வாயிலிலும், சோழபுரம் கடைத்தெருவிலும் உறவினர்கள், நண்பர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சோழபுரம் போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து தந்தை, மகனை தேடி வருகின்றனர்.