கலிபோர்னியா: எதிர்வரும் பிப்ரவரி 1 முதல் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்றும், யூடியூப் தளம் அதனை பகிர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாற்றம் யூடியூப் பார்ட்னர் புரோகிராமின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதற்கு சில நிபந்தனைகள் உள்ளதாம்.
இந்தியாவில் டிக்டாக் செயலி தடையை தொடர்ந்து கடந்த 2020 செப்டம்பர் வாக்கில் யூடியூப் ஷார்ட்ஸ் தளம் பீட்டா வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2021 ஜூலையில் உலக அளவில் ஷார்ட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 15 முதல் 60 நொடிகள் வரையில் போர்ட்ரைட் மோடில் பயனர்கள் இதில் வீடியோக்களை பார்க்கலாம், பகிரலாம். ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தளம் எனவும் இதை சொல்லலாம்.
இப்போது உலக அளவில் இது மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. பயனர்கள் இதில் வீடியோக்களை கீழிருந்து மேலாக ஸ்க்ரோல் செய்து பார்க்கலாம். அதோடு லைக், ஷேர் மற்றும் கமெண்டும் செய்யலாம்.
இந்தச் சூழலில்தான் விளம்பர வருவாயை பகிர்வது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எனினும் கிரியேட்டர்கள் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இணைந்தால் மட்டுமே ஆதாயம் பெற முடியும் என தகவல். அதேபோல இந்த புரோகிராமில் ஏற்கெனவே இணைந்துள்ள பயனர்கள் புதிய விதிகளுக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. அதற்கான கெடு வரும் ஜூலை 10 வரையில் கொடுக்கப்பட்டுள்ளதாம்.