புதுடெல்லி: உத்தராண்ட்டில் ஜோஷிமத் நகரம் புதைந்து வருவதை தேசிய பேரிடாக அறிவித்து, அங்கு நடக்கும் அனைத்து திட்டப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. உத்தரகாண்ட்டின் ஜோஷிமத் நகரில் உள்ள 4,500 கட்டிடங்களில் 600க்கும் மேற்பட்டவற்றில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படுவதால் நகரமே புதையும் அபாயம் நிலவுகிறது.
இது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘இயற்கையை பாதுகாக்க வேண்டும். ஜோஷிமத் நகர மக்களை எண்ணி ஒட்டுமொத்த நாடே கவலை கொள்கிறது. எனவே, ஜோஷிமத் பாதிப்பை தேசிய பேரிடராக ஒன்றிய பாஜ அரசு அறிவிக்க வேண்டும். ரயில்வே, நீர் மின் நிலையம் உள்ளிட்ட புதிய மேம்பாட்டு திட்டப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நிபுணர்களை கொண்ட உயர்மட்ட குழு அறிக்கை தரும் வரை எந்த திட்டப்பணிகளையும் உத்தரகாண்ட்டில் மேற்கொள்ளக் கூடாது’’ என்றார்.
மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறுகையில், ‘‘ஜோஷிமத்தில் விரிசல் விழுந்த 200 வீடுகள் வாழ முடியாதவை என உள்ளாட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களில் சென்று 6 மாதம் தங்குவதற்கு ரூ.4000 உதவித் தொகை அறிவித்துள்ளனர். இதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஜோஷித் நகரை முழுவதும் இடித்து, புதிய நகரை ஒன்றிய அரசு உருவாக்கி தர வேண்டும்’’ என்றார்.
இதற்கிடையே, ஜோஷிமத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்ய உள்ளது.
ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்
* ஜோஷிமத் நகரில் விரிசல் விழுந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 68 வீடுகளில் விரிசல் விழுந்துள்ளது.
* இதுவரை 82 குடும்பங்கள் நகரில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 27 குடும்பங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
* ஜோஷிமத் நகரில் இருந்து மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு அவர்களாகவே வெளியேறி வருகின்றனர்.
* பாதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இனி ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்றும் உத்தராண்ட் தலைமை செயலாளர் சாந்து கூறி உள்ளார்.