கூடலூர்: பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு லோயர்கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபம் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. மேலும் அன்று விவசாயிகள் சார்பில் 500 பேருக்கு இலவசமாக தேங்காய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை நினைவுகூறும் விதமாக தமிழக அரசு சார்பில் கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இவருக்கு முழுஉருவ வெண்கல சிலையும், அவர் பயன்படுத்திய நாற்காலி, அணை கட்டுமானத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அணையின் மாதிரி வடிவம் போன்றவையும் உள்ளன. பொதுமக்கள் மட்டுமல்லாது, சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் தினமும் இதனை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இந்த மணிமண்டபத்தில் பென்னிகுவிக் பிறந்த நாளான ஜன.15ம் தேதி மற்றும் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட அக். 10 தேதி ஆகிய தினங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக 2019-ம் ஆண்டு முதல் பென்னிகுவிக் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் 15-ம் தேதி பென்னிகுவிக்கின் 182-வது பிறந்தநாள் என்பதால் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் வளாகத்தில் உள்ள புதர்செடிகளை அகற்றியும், கிராஸ் கட்டர் மிஷின் மூலம் புற்களை வெட்டியும் தூய்மைப்படுத்தப்பட்டன.
மேலும் மணிமண்டபத்தில் வர்ணம் பூசியும் சிலையை மெருகேற்றும் பணியும் நடைபெறுவதால் மணிமண்டபம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. ஜன.15-ம் தேதி விவசாயிகள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறுகையில், “மணிமண்டபத்தில் பொங்கல் வைக்கப்பட்டு பாரம்பரிய கலையான சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேங்காயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், ரேஷனில் இவற்றை வழங்க வலியுறுத்தியும் 500 பேருக்கு தேங்காய் வழங்க இருக்கிறோம்” என்றார்.