வேலூர், சத்துவாச்சாரி அருகில் இருக்கும் வசூர் பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பைக்குகள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் நிஷாந்த் மற்றும் அவன் தந்தை சரவணன் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் துடிதுடித்துக் கொண்டிருந்ததை, சாலையில் சென்ற சக வாகன ஓட்டிகளும், அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் சூழ்ந்து நின்று வேடிக்கைப் பார்த்தனரே தவிர ஒருவர்கூட அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்ல முன்வரவில்லை.
அந்த நேரம், வாணியம்பாடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, தனது 16 வயது மகனுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்த ஐ.டி நிறுவன பெண் ஊழியர் கீதா, விபத்து நடந்த பகுதியில் காரை ஓரமாக நிறுத்தினார். ஒரு நிமிடம்கூட அவர் தாமதிக்காமல் காரிலிருந்து இறங்கி வந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை மடியில் கிடத்தி முதலுதவி சிகிச்சை கொடுத்தார்.
அந்த நேரத்தில், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, வேலூர் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் இருவரும் கார்களில் வந்தனர். அவர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவினர். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டதால், எஸ்.பி ராஜேஷ்கண்ணன் தனது காரை அனுப்பி விபத்தில் சிக்கிய குழந்தையை முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு காவலரிடம் கூறினார். அப்போது, கீதாவே அந்தச் சிறுவனை தன் பிள்ளைபோல பதற்றத்துடன் தூக்கிக்கொண்டு எஸ்.பி-யின் காரில் ஏறினார். சிறுவனை மடியில் கிடத்தி மார்போடு சாய்த்தபடி பிடித்துக் கொண்டார். கார், ரத்தினகிரி பகுதியிலுள்ள சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றது.
காரில் இருந்து இறங்கிய கீதா அந்தச் சிறுவனை தூக்கிக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஓடினார். அதன்பிறகு சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதால் சிறுவன் பிழைத்துக் கொண்டான், சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தாலும் சிறுவனை காப்பாற்றியிருக்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனை தூக்கிக்கொண்டு கீதா ஓடும் சி.சி.டி.வி காட்சிகள் மருத்துவமனையிலிருந்து வெளியாகி, பாராட்டுகளை பெற்றிருக்கின்றன. `நற்கருணை வீரச்சி’ என்று கீதாவை டி.ஐ.ஜி முத்துசாமி பாராட்டியிருக்கிறார். எஸ்.பி ராஜேஷ்கண்ணனும் அவரை மனதாரப் பாராட்டியுள்ளார்.
இதனிடையே, காயமடைந்த மற்றவர்களும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் துரதிருஷ்டவசமாக சிறுவனின் தந்தை சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
கீதாவிடம் பேசினோம். “சிறுவனின் தந்தை உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். விபத்தில் சிக்கியவர்களை வேடிக்கை பார்க்காமல், உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ அனுமதியுங்கள். முதல் 15 நிமிடங்கள்தான் மிக முக்கியம்.
அன்று என் மகனை காரிலேயே தனியாக விட்டுவிட்டு சிறுவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். பின்னர், என் மகன் இருந்த காரை போலீஸ் ஒருவர் கொண்டுவந்து என்னிடம் ஒப்படைத்தார். காரில் அந்தச் சிறுவனை மடியில் போட்டுக்கொண்டு வந்தபோது, என் பிள்ளைபோலத்தான் எனக்குத் துடித்தது. எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணினேன்.
எப்படியோ சிறுவனை காப்பாற்றிவிட்டேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், அவனது தந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்பது பெரும் சோகம். வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவராவது அவர்களது காரிலோ, மற்ற வாகனங்களிலோ காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்தால் அவர்களும் பிழைத்திருப்பார்கள். மனம் கனக்கிறது’’ என்றார் வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு.