சென்னை: மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர்ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார். அவரது உரையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 7 நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரையில் ரூ.600 கோடியில் மாநிலத்தின் 3-வது டைடல் பூங்கா அமைக்கப்படும். மாநில வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் வழங்கப்படும் கடன்கள் 20 சதவீதமும், கடன் கணக்குகளின் எண்ணிக்கை 19 சதவீதமும் உயர்ந்துள்ளன. ரூ.2,344கோடியிலான 16,000 சுயதொழில்திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 5 புதிய தொழிற்பேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 மே மாதம் முதல், மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 லட்சம் பேருக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 4.5 லட்சம் பேரும் இதன்மூலம் பயனடைவர்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் 2022-23ஆண்டில் ரூ.1,155 கோடியில் 2,544 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தில் முதல்கட்டமாக, 149 சமத்துவபுரங்களில் ரூ.190 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுப்பிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. நகர்ப்புற பகுதிகளில் ரூ.9,588 கோடியில் 20,990 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்தும் பணி விரைவில் முடியும்.
மாநிலத்தின் 53 பகுதிகளில் தேங்கியுள்ள பழைய கழிவுகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அப்புறப்படுத்த ரூ.122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 369 ஏக்கர் பரப்பிலான பகுதி, பசுமையான பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 103 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.15,734 கோடியும், நகர்புற பகுதிகளுக்கு ரூ.3,166 கோடியும் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்காக, சென்னை பெருநகரின் எல்லை 5,904 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தால், ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முறை, பல்வழி போக்குவரத்து திட்டம், பெண்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்தல் ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
சென்னை அருகே மாடம்பாக்கத்தில் 600 ஏக்கரில், நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சி பகுதி உருவாக்கும் முயற்சியில் சென்னைபெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது. அடுத்தகட்டமாக, இதேமுறையை பின்பற்றி மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம்அமைக்கப்படும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.