வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக, நாட்டில் ஈடு கொடுக்க முடியாத பொருளாதார கட்டமைப்பு உருவானதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
75 ஆவது சுதந்திர தினத்திற்கு அமைவாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு தெளிவுப்படுத்தும் விடயங்கள் இந்த நிகழ்வின் போது இடம்பெற்றன.
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க வேண்டியவர்கள் மாணவர் சமுதாயமாகும். மாணவர்கள் மத்தியில் கல்வி ஆற்றல் தவிர வேறு திறமைகளும் உண்டு. தாம் கல்வி அமைச்சராக பணியாற்றிய காலத்தில் தொழில்நுட்பத்தை பாடசாலைகளில் அறிமுப்படுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டுக்கு அரசியல் சுதந்திரமே கிடைத்தது. அதனூடாக சுதந்திர பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருக்க வேண்டும்.
இருப்பினும், ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் ஏற்பட்ட பெருந்தோட்ட பொருளாதாரத்தில் இருந்து எம்மால் மீள முடியாமல் போய்விட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட உரையாற்றுகையில், எதிர்வரும் 25 வருட காலப்பகுதியில் நாட்டை கட்டியெழுப்பும் பணி தற்போதைய மாணவ சமூகத்திற்கு இருப்பதாகவும் கூறினார்.
நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமானால், ஒழுக்கம், அர்ப்பணிப்பு,தொலை நோக்கு மற்றும் இலங்கையர் என்ற ரீதியில் முன் நிற்பது முக்கியமானது என்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.