திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜைகள் கடந்த 31ம் தேதி தொடங்கியது. மண்டல காலத்தைவிட தற்போது சபரிமலையில் பக்தர்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை வரும் 14ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மகரவிளக்கு தினத்தன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மகரவிளக்கு தினத்தன்று போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று சன்னிதானம் எஸ்பி பிஜூ மோன் தெரிவித்தார்.