நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜம்புகேசவன் (38). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களது மகன் ரோகித் (11), மகள் அப்சனா (10). கடந்த 2014ல் நடந்த கொலை வழக்கு தொடர்பாக ஜம்புகேசவன் திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இதனால் மகேஸ்வரி, நாகப்பட்டினம் நகராட்சியில் தற்காலிக களப்பணியாளராக பணியாற்றி வந்தார். மூத்த மகன் ரோகித், அருகில் வசிக்கும் சித்தி அமுதா வீட்டில் வளர்ந்து வந்தான். கடந்த சில தினங்களாக வேலை இல்லாமல் மகேஸ்வரி, மகள் அப்சனாவுடன் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை தங்கை அமுதா வந்து பார்த்த போது மின் விசிறியில் சேலையின் ஒரு பகுதியில் அப்சனாவை தூக்கில் மாட்டி விட்டு, அதன் அருகே மகேஸ்வரியும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. தகவலறிந்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘கணவர் ஜம்புகேசவன், சிறை சென்று 8 ஆண்டுகள் ஆவதால் மகேஸ்வரியால் குடும்பம் நடத்த முடியவில்லை. கடந்த சில மாதங்களாக வாடகை கூட செலுத்த முடியாமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுபற்றி அப்பகுதியினரிடம் கூறி தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.