Thunivu Varisu Chennai Rohini Theatre: இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சுமார் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது தமிழகம் முழுவதும் உள்ள இவ்விரு ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. இன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் கொண்டாடினர்.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு பகுதியில் ரோகிணி திரையரங்கில் துணிவு, வாரிசு இரண்டு படங்களும் வெளியாகின. எனவே, இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் தனித்தனியே அங்கு கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில், திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் வாரிசு பட பேனர் அடையாளம் தெரியாத நபர்களால் கிழிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு அடைந்த நிலையில், அஜித்தின் துணிவு பேனரையும் சிலர் கிழித்துள்ளனர். இதையடுத்து, ரசிகர்கள் செருப்பு, குச்சி, வாட்டர் கேன், கம்பு, கல் ஆகியவற்றை எடுத்து தியேட்டர் முகப்பு கண்ணாடி மீது வீசினர். இதனால், அங்கு கலவர சூழல் போன்று காட்சியளித்தது. இதையடுத்து, போலீசார் திரையரங்கு வாயில் கதவை அடைத்து, சாலையில் வாகனங்களுக்கு தொந்தரவு வராத வண்ணம் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும், வளாகத்திற்குள்ளும் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.