Varisu Movie Review: வாரிசு படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்

Varisu Movie Review: விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக விஜய் அடுத்த நடிக்க இருந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், பீஸ்ட் படத்தின் தோல்வியை சமாளிக்க நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும், தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ‘வாரிசு’ பட திரைப்படம் இந்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. தற்போது, படம் பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாள்களுக்கு முன், ஜன. 11ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன் முதல் முதலாக ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ளார். மேலும் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, ஷ்யாம், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.  

வாரிசு விமர்சனம் – No Spoilers

விஜய்யின் அப்பாவான சரத்குமார் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார். அவருக்கு மொத்தம் மூன்று மகன்கள். அதில் மூன்றாவது மகன்தான், விஜய்.  முதல் இரண்டு மகன்கள் தந்தை சொல் பேச்சை கேட்டு அவரது தொழிலை கவனித்து வர, விஜய் மட்டும் அவரது சொந்த காலில் நிற்பேன் என்று வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.  ஒரு கட்டத்தில் விஜய் மீண்டும் வீட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பின்பு என்ன ஆனது என்பதுதான் வாரிசு படத்தின் மீதி கதை.

வழக்கம்போல விஜய் தனது நடிப்பு மற்றும் பாடி லாங்குவேஜில் அசத்தியுள்ளார். குறிப்பாக வாரிசு படத்தில் கூடுதல் சிறப்பாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இரண்டாம் பாதியில் விஜய் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் விசில் பறக்கிறது. விஜய்க்கு அடுத்தபடியாக சரத்குமார் மற்றும் ஷ்யாம் அதிக கைத்தட்டல்களை பெற்றனர்.  விஜய் படத்திற்கு முதன்முதலாக இசையமைத்திருக்கும் தமன், பின்னனி இசையில் புகுந்து விளையாடியுள்ளார்.

ஒரு தெலுங்கு பட இயக்குநர் தமிழ் மக்களுக்கு ஏற்றவாறு எப்படி படம் எடுக்க போகிறார் என்ற கேள்வி அனைவரும் மத்தியில் இருந்தது. ஆனால், அதையெல்லாம் உடைத்து, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார், இயக்குநர் வம்சி. வசனத்திலும், பாடல் வரிகளிலும் கவிஞர் விவேக் அசத்தியுள்ளார். 

இரண்டாம் பாதி முழுக்க ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது வாரிசு படம். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கதையில் சிறிது நேரமே வந்தாலும் அந்த காட்சிக்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தியுள்ளனர். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் கதை சூடு பிடிக்க தொடங்கியவுடன் ஜெட் வேகத்தில் செல்கிறது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியது போல, டான்ஸ், சண்டை, விஜய் பாடி லேங்குவேஜ், எமோஷன் என அனைத்தும் சேர்ந்த கலவையாக உள்ளது என தெரிவித்திருந்தார். அதேபோலவே, படம் பக்கா கமர்ஷியலாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.