அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை

2023 வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஊடாக, அனைத்து அமைச்சுக்களின் செலவீனங்களில் இருந்தும் 5 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு பல சவால்களைக் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. வெளிநாட்டு கடன் உதவியை பெற முடியாத நிலையில நாடு உள்ளது. பொருளாதாரப் பிரச்சினை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது. எனவே இதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாக இவ்வருடம் அனைத்து அமைச்சுக்களினதும் மூலதனச் செலவு தவிர்ந்த மீள் எழும் செலவில் இருந்து 5 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சுக்களின் நாளாந்த செலவுகள் உட்பட அமைச்சுக்களின் செலவுகளை இயன்றவரை குறைத்துக் கொள்ளுமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் நிதி அமைச்சின் ஊடாக சுற்றறிக்கை  வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இம்மாதம் சமூர்த்தி கொடுப்பனவு வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், அந்தக் கொடுப்பனவை மிக விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமூர்த்திக் கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்குவதற்கு அரசாங்கமும் நிதி அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.