புதுடெல்லி: இம்மாத இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்தியஅரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப்பாதை) சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை குடியரசுத் தலைவருக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது.
டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த புதிய கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இம்மாத இறுதிக்குள்புதிய கட்டிடம் தயாராகிவிடும் என்றுமத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய கட்டிடத்திலேயே வரும்பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்றும்,இதுதொடர்பான இறுதி முடிவுஎடுக்கப்படவில்லை என்றும் அந்தவட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது கட்டிடத்தின் உள் அலங்காரஇறுதிப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறும்போது, “கட்டிடத் திறப்பு விழா தேதி குறித்து முடிவெடுக்குமாறு அரசிடம் கடந்த நவம்பர் மாதமே தெரிவிக்கப்பட்டது. இன்னும் திறப்பு விழா தேதி முடிவு செய்யப் படவில்லை’’ என்றார்.