இவ்ளோ செஞ்சிட்டு எனக்கு… சபாநாயகர் அப்பாவு கேட்ட விஷயம்… சட்டென சிரிச்ச பொன்முடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரின் போது பேசிய பழனி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில் குமார் பேசுகையில், கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன. இதனால் பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண்களுக்கு அந்த வசதி குறைவாக உள்ளது. ஏனெனில் அவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் மதுரைக்கு 115 கி.மீ தூரத்திற்கும், திண்டுக்கலுக்கு 94 கி.மீ தூரத்திற்கும், பழனிக்கு 65 கி.மீ தூரத்திற்கும் செல்கிற நிலை இருக்கிறது.

மலைப் பகுதி மாணவர்கள்

ஆனால் மழை காலங்களில் இரண்டு நாட்கள் வரை போக்குவரத்து தடைபடும் சூழல் நிலவுகிறது. மலைப் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 6 அரசு கலை கல்லூரிகள் இருக்கின்றன.

பழனி கலைக் கல்லூரி

பழனி தொகுதியை பொறுத்தவரை அன்னை தெரசா மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 660. இதில் 437 இடங்கள் காலியாக இருக்கின்றன. பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் இருபாலர் கல்லூரியிலும் காலியிடங்கள் உள்ளன. கொடைக்கானல் மாணவர்கள் பழனிக்கு வந்து படிக்கலாம். ஆனால் எம்.எல்.ஏ அவர்கள் கொடைக்கானல் பகுதியிலேயே அரசு கல்லூரி வேண்டும் என்கிறார்.

எம்.எல்.ஏ செந்தில் குமார் கோரிக்கை

நியாயமான கோரிக்கை. மற்ற மாவட்டங்களில் விட அங்கு அதிக கல்லூரிகள் இருப்பதால் புதிதாக கல்லூரி கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றார். மேலும் பேசுகையில், கடந்த ஆண்டு 10 கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும் என்று முதல்வர்
மு.க.ஸ்டாலின்
சொன்னார். ஆனால் முதல்வர் பொறுப்பேற்ற 20 மாதங்களில் 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு

அதில் அரசு கலைக் கல்லூரிகள் 20, கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கல்லூரி, அறநிலையத்துறை மூலமாக 10 கல்லூரிகள் அடங்கும். இவ்வாறு 31 கல்லூரிகளை ஒன்றரை ஆண்டுகளில் தொடங்கிய ஒரே அரசு நமது திமுக அரசு தான் எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இவ்வளவு தூரம் தொடங்கி வச்சுருக்கீங்க.

பொன்முடி அளித்த உறுதி

எங்கள் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று எனக் கேட்டார். உடனே அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. நீங்களும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முதல்வரிடம் சொல்லி இந்த பட்ஜெட்டில் அறிவிக்க முடியுமா? என்று பார்க்கிறேன். அதேசமயம் உங்கள் தொகுதியிலும் தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழக கல்லூரிகளாக மாற்றியிருக்கிறோம் என பொன்முடி கூறினார்.

உடனே ஒன்றே ஒன்று ராதாபுரத்திற்கு என்று அப்பாவு சிரித்தவாறே கேட்டு முடித்துக் கொண்டார். எந்தெந்த தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லையோ, அங்கெல்லாம் வருங்காலங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். நிதிநிலைக்கு ஏற்ப அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.