உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமத் நகரம் ‘பூகோள சொர்க்கம்’ என்று குறிப்பிடப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் இருக்கும் இந்தக் நகரம், தற்போது நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜோஷிமத் நகரம் பூமிக்குள் புதைந்துவருவதால் வீடுகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் விரிசலடைந்திருக்கின்றன.
தற்போது, 603 கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். வசிக்க முடியாத அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாநிலம் கன்வாரிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளிலும் திடீரென விரிசல் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்தப் பகுதியில் வாழும் மக்கள்,”கடந்த சில நாட்களாக எங்கள் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுவருகிறது. அதனால் பதற்றத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து புகாரளித்து 3-4 நாட்களாகிவிட்டன.
ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி மட்டும் அளித்து வருகின்றனர். வீடுகள் இடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், அரசால் அமைக்கப்பட்ட பைப்லைன், தற்போது கசிவு ஏற்பட்டு, விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.” எனத் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ராகேஷ் குமார் யாதவ், “கன்வாரிகஞ்ச் பகுதியில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தற்போதுதான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் இன்னும் முழு கவனத்திற்கு வரவில்லை. எங்கள் குழுவை அந்த இடத்திற்கு அனுப்புவோம், தேவையான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ளும்” என உறுதியளித்திருக்கிறார்.