புதுடில்லி, ஐ.எஸ்., எனப்படும் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இருவரை, கர்நாடக மாநிலம் பெங்களூரில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஷிவமொகாவில் உள்ள சில முஸ்லிம் இளைஞர்கள், ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது.
இதில் இவர்கள், கடந்தாண்டு இங்குள்ள துங்கா நதிக் கரையில் வெடிகுண்டு களை வெடிக்கச் செய்து பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில், கடந்தஆண்டு ஆக., ௧௫ல் ஷிவமொகா நகரில் ஹிந்துத்துவா தலைவரான வீர் சாவர்க்கர் படத்தை சிலர் வைக்க முயன்றனர். இதை ஒரு கும்பல் எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டது. அந்த சம்பவத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள், ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரில் ஆட்டோ வில், ‘குக்கர் பாம்’ எடுத்துச் சென்றபோது அது வெடித்த வழக்கில் முகமது சிராக் என்பவர் காயமடைந்தார். அவருக்கும், கைது செய்யப் பட்ட நால்வருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துஉள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மேலும் இருவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பெங்களூரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
இதில், மாசின் அப்துல் ரஹ்மான் மங்களூரைச் சேர்ந்தவர் என்பதும், நதீம் அஹமது, தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துஉள்ளது.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்