வாகனக் கடன் வழங்க தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்தும், கடன் வழங்காமல் தாமதித்த பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சுற்றுலா வாகனம் வாங்குவதற்காக மயிலாடுதுறையில் உள்ள பேங்க் ஆப் பரோடா மூலம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 199 ரூபாயை கடனாக வழங்க 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான தாட்கோ நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் ஒப்புதல் அளித்தார்.
ஆனால், தொகையை வழங்க வங்கி தாமதப்படுத்தியதை அடுத்து, கடன் வழங்க உத்தரவிடக் கோரி பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்து, கடன் பெற அவருக்கு தகுதி உள்ளது என தாட்கோ நிறுவனம் தீர்மானித்து கடன் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில், வங்கி நிர்வாகம் மனுதாரரை அழைத்து தேவையான ஆவணங்களை பெற்றுக் கொண்டு கடன் தொகையை வழங்கி இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆனால் கடன் வழங்காமல் 7 ஆண்டுகளாக தாமதித்த வங்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, தாட்கோ ஒப்புதல் அளித்த கடனை உடனடியாக வழங்க வங்கிக்கு உத்தரவிட்டதுடன், கடன் தொகையை வழங்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்திய பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகயை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்தவும் வங்கிக்கு உத்தரவிட்டு உள்ளார்.