பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வந்தார். கடந்த 2013 தேர்தலிலும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வென்று முதல்வர் ஆனார்.
ஆனால் 2018-ம் ஆண்டு தேர்தலின்போது சித்தராமையா அந்த தொகுதியில் போட்டியிட்ட போது காங்கிரஸாரே அவருக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தனர். இதனால் அவர் சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அடுத்த தேர்தலில் சித்தராமையா மீண்டும் பாதாமி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். ஆனால் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவரை தோற்கடிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. காங்கிரஸாரின் உள்ளடி வேலைகளுக்கு அஞ்சி சித்தராமையா, ‘‘2023ம் ஆண்டு தேர்தலில் நான் கோலார் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என அறிவித்துள்ளார்.