கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிணற்றில் 8ஆம் வகுப்பு மாணவி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவரது மகள் ராஜேஸ்வரி (13) தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த ராஜேஸ்வரி திடீரென காணாமல் போனார்.
இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரியை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் ராஜேஸ்வரி கிடைக்காத நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் ராஜேஸ்வரியின் செருப்பு மிதந்துள்ளது. இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து மாணவியின் உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து மாணவியின் உடலை திருநாவலூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.