“சனாதனம் தமிழகத்திலிருந்துதான் பாரதம் முழுவதும் பரவியது!" – திருவையாறில் ஆளுநர் ரவி பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து தன்னுடைய மனைவியுடன் கலந்துகொண்டார். ஆளுநருக்கு எதிரானப் போராட்டங்கள் நடைபெறும் என்பதால், தஞ்சாவூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மோப்பநாயுடன் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆளுநரை வரவேற்று திருவையாறு முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆளுநர் ரவி வந்ததும் நேராக தியாகராஜர் சமாதிக்குச் சென்று அவரது சிலை முன்பு நின்று வணங்கினார். அங்கு அவருக்கு பூரணக் கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. உடன் ஸ்ரீ தியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஜி.கே.வாசன், ஆளுநர் ரவி உள்ளிட்டோருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

தியாகராஜர் ஆராதனை விழாவில் ஆளுநர் ரவி

பின்னர் ஆளுநர் ரவி பேசுகையில், “திருவையாறுக்கு நானும், என்னுடைய மனைவியும் வந்திருக்கிறோம். நமது பாரதத்தின் அனைத்து புனித நதிகளையும் வணங்க வேண்டும். கங்கை அன்னையிடமிருந்து பிரார்த்தனை துவங்குகிறது. கங்கா, காவிரி, நர்மதா, சரஸ்வதி, கோதவரி, சிந்து ஆகிய புண்ணிய நதிகளின் அருளைப் பெற வேண்டும் என சனாதன தர்மம் கூறுகிறது.

ஸ்ரீ ராமரின் மிகப்பெரிய பக்தர்களுள் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் வாழ்ந்த இந்தப் பகுதிக்கு வந்திருப்பதால், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். தியாகராஜர் ஸ்ரீ ராமனை போற்றி ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். ஒவ்வொருவரின் இதயத்திலும் ராமபிரான் இடம்பெற்றுள்ளார். நமது பாரத கலாசாரத்தின் அடையாளமாக ராம பிரான் திகழ்கிறார். ராம பிரானால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது நாட்டு மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சரத்தின கீர்த்தனை பாடும் இசை கலைஞர்கள்

நமது பாரத நாடு சர்வாதிகாரிகளால் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், தியாகராஜ சுவாமிகள் போன்ற கவிகளாலும்தான் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் என அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும்விதமாக இந்த நாடு தோற்றுவிக்கப்பட்டது. இந்த சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது. அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியதே நம் பாரதத்தின் வளர்ச்சியாக இருக்கிறது. சனாதனம் தமிழகத்திலிருந்துதான் பாரதம் முழுவதும் பரவியது.

இந்த பாரத நாடு தெற்கில் தொடங்கிய ஒரே குடும்பம், ஒரே நாடாக ஒன்றிணைந்த குடும்பமாக இருக்கிறது. பக்திதான் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது. இந்த பக்தி மூலம் தியாகராஜ சுவாமிகள் ஏராளமான கீர்த்தனைகளைப் பாடி கர்நாடக இசை உலகுக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார். பக்தி மூலம் அவர் இறைவனை அடைந்தார். இவரைப் போன்ற பக்தர்களால்தான் இந்த பாரதம் உருவாக்கப்பட்டது.

மனைவியுடன் ஆளுநர் ரவி

ஸ்ரீ ராமனை நேசிக்கும் அனைவருக்குமான ஓர் இடமான திருவையாறை புண்ணிய பூமியாக நாம் உணர்கிறோம். ராம பிரான் மீதான பக்தி நாடு முழுவதும் நிலவுகிறது. எனவே நம் பாரதம் ஆன்மிக உணர்வுடன்கூடிய புண்ணிய பூமியாக திகழ்கிறது. இந்த சபைக்கு மிகவும் நன்றி. கடந்த 176 ஆண்டுகளாக பாரம்பர்யத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். நாட்டில் அனைவரும் தியாகராஜர் சன்னிதிக்கு நிச்சயம் வர வேண்டும்.

நமது பாரத நாடு 18-ம் நுாற்றாண்டு வரை உலகத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய வல்லரசாக திகழ்ந்தது. அதன் பிறகு வந்த காலனியாதிக்கத்தால் பின்னடைவு ஏற்பட்டது. நாமெல்லாம் சோழ வம்சத்தினர். இன்னும் 25 ஆண்டுகளில் நமது நாட்டின் மறு கட்டமைப்புக்கு நாம் முயற்சிகளை முன்னெடுக்கும் சூழலில், உலக அளவில் தலைமை தாங்கும் அளவுக்கு நமது நாடு உருவாக உள்ளது.

ஆளுநர் ரவி, ஜி.கே.வாசன்

உலக அளவில் 85 சதவிகித ஜி.டி.பி-யில் இந்தியா சேர் பர்சனாக உள்ளது. உலக அளவில் பல ஏற்றத்தாழ்வுகளை பல நாடுகள் கண்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் இந்தியா உலகத்தை காத்து வருகிறது. நமது நாடு பொருளாதாரம், ராணுவம் என அனைத்திலும் உறுதியாக உள்ளது. விவேகானந்தரின் கனவுகளில் இந்தியா உருவாகி வருகிறது” என்றார்.

பின்னர் சுதா ரகுநாதன், மஹதி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இதனை ஆளுநர் ரவி முழுவதுமாக கேட்டு ரசித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.