சென்னையிலே 46வது புத்தகத் திருவிழா தொடங்கியிருக்கிறது. அதையொட்டி தினமும் ஒரு ஆளுமைகளின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.இன்று மொழிப்பெயர்ப்பு நூலான ஓநாய் குலச்சின்னம் மற்றும் பியானோ ஆகிய புத்தகங்களுக்காக 2022 ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருது பெற்ற எழுத்தாளர் சி.மோகன் அவர்களின் புத்தகப் பரிந்துரைகளைப் பார்க்க இருக்கின்றோம். இதோ அவர் பரிந்துரைச் செய்த புத்தகங்கள்…
1.கி.ரா படைப்புகள் (9 தொகுதிகள்) – அன்னம் பதிப்பகம்
என்னுடைய பரிந்துரைகள் என்பது, இன்று புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் இளம் தலைமுறையினருக்கும் மற்றும் வாசிப்பின் தொடக்கத்தில் இருக்கும் முதற்கட்ட வாசகர்களையும் மையப்படுத்தியதே ஆகும்.
முதலில் வாசகர்களுக்கு நான் பரிந்துரை செய்வது கி.ராஜநாராயணன், அவர்களின் நூற்றாண்டையொட்டி அன்னம் பதிப்பகம் வெளியிட்ட அவரது முழுத்தொகுப்பாகும். இது 6500 பக்கங்கள் மற்றும் 9 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இதில் கி.ரா அவர்களின் நாவல்கள்,கட்டுரைகள்,கவிதைகள்,சிறுகதைகள்,பேட்டிகள் என அவர்களின் அனைத்து படைப்புகளும் உள்ளன.
2. புயலிலே ஒரு தோணி , கடலுக்கு அப்பால் – புலம் பதிப்பகம், கலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி பதிப்பகம்
இரண்டாவதாக நாவலை விரும்பி படிக்கக்கூடிய நபர்களுக்காக நான் பரிந்துரை செய்வது, தமிழில் அதிகம் அறியப்படாத ஆனால் மிக முக்கியமான படைப்பாளியான ப.சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” மற்றும் “கடலுக்கு அப்பால்” ஆகும். இந்நூல்களுக்கு பதிப்புரிமை இல்லாத காரணத்தினால் அனைத்து பதிப்பகங்களுமே இதை வெளியிடுகிறது.
இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசியாவை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகம் இது. வாசிக்ககூடிய நபர்களுக்கு மனயெழுச்சியையும் ஒரு சிறந்த நாவலின் அறிமுகத்தையும் தரக்கூடியக் காவிய புனைவு என்றே சொல்லலாம்.
3. அசோகமித்திரன் முழு சிறுகதைத் தொகுப்பு / தி.ஜானகிராமன் முழு சிறுகதைத் தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம்
மூன்றாவதாக சிறுகதைகளை விரும்பி படிக்கக்கூடிய நபர்களுக்கான பரிந்துரை. சிறுகதை என்பதற்கு தமிழ் எழுத்துலக சூழலில் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. அதில் புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி என்று பெரிய பட்டியலே சொல்லிவிடலாம் இருந்தும், அதில் மிக முக்கியமான நபர்களாக நான் பார்ப்பது அசோகமித்திரன்,தி.ஜானகிராமன் இருவர்.
இரண்டு நபர்களுடைய மன உலகமும் வெவ்வேறாக இருந்தாலும் இவர்கள் இருவரின் சிறுகதைகளைப் படித்தால் மன உலகத்தின் விசித்திரங்களையும், வாழ்க்கையை பற்றிப் புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளை இலகுவாக கையாளக்கூடிய ஒரு பக்குவத்தையும் தரும்.ஆகவே சிறுகதை விரும்பிகள் இருவரது தொகுப்பையும் வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
4. பிரமிள் கவிதைகள்
கவிதைகளில் ஆர்வமுடைய நபர்களுக்கு நான் அவசியமாக பரிந்துரை செய்வது பிரமிள் அவர்களுடைய கவிதை புத்தகம் தான்.
ஆரம்பத்தில் தருமு சிவராமனாக வந்து பின்னாளில் பிரமிள் என்று எழுதிய இவரது, முழு கவிதைத் தொகுப்பினையும் கால சுப்ரமணியம் எனும் நபர் லயம் பதிப்பகம் மூலமாக முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். வாசகர்கள் இதை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
5. ஓநாய் குலச்சின்னம் – சி.மோகன் – புலம் பதிப்பகம்
மொழிபெயர்ப்பில் ஆர்வமுடைய நபர்களுக்கு நான் பரிந்துரை செய்வது ஓநாய் குலச்சின்னம் எனும் ஜியாங் ரோங் எழுதிய சீன நாவல் ஆகும். இது நான் மொழிபெயர்த்த நாவல் என்றாலும், இதில் இருக்கும் கருத்துக்கள் இன்றைய நவீன சூழலுக்கு அவசியமான ஒன்றாக நான் பார்க்கிறேன்.
ஒரு சில புத்தகங்கள் கண்களால் வாசிக்கப்படும். ஒரு சில புத்தகங்கள் மனதில் வாசிக்கப்படும் வெகு சில புத்தகங்கள் மட்டுமே வாசகர்களின் முதுகுத் தண்டின் வழியே வாசிக்கப்படுகிறது. அப்படியான ஒரு அனுபவத்தைத் தரக்கூடிய நாவலாக இதனைப் பார்க்கிறேன். வாசகர்கள் அனைவரும் இதை வாங்கிப் படிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், புத்தகம் இல்லையென்றால் வரலாறு இல்லை ! வரலாறு இல்லையென்றால் மனிதர்களே இல்லை ! ஆகையால் அனைவரும் வாசிக்க வேண்டும் என்று சொல்வேன்.