சென்னையில் ரகசியமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய உ.பி. அரசு – ஒரே நாளில் ரூ.10,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி / சென்னை: உத்தரப் பிரதேச அரசு சார்பாக சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) உதவியுடன் உ.பி. அரசு இந்த மாநாட்டை நடத்தியுள்ளது. இம்மாநாட்டில் 500 தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். ரூ.10,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுவாக, ஒரு மாநிலத்தில் பெரிய அளவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்போது, அது குறித்து அம்மாநில ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது வழக்கம். ஆனால், உ.பி. அரசால் நடத்தப்பட்ட இந்த மாநாடு தொடர்பாக பெரும்பாலான ஊடகங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. ரகசியமாகவே இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

உ.பி.யில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததையடுத்து அம்மாநிலத்தில் தொழில் முன்னேற்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இறங்கியுள்ளார். இதன் பகுதியாக, வரும் பிப்ரவரி 10, 11 மற்றும் 12 தேதிகளில் உ.பி. தலைநகர் லக்னோவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் உ.பி. அரசு முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்தி உள்ளது. வரும் ஆண்டுகளில் உ.பி.யில் ரூ.50,000 கோடி அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகள் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கியமான மாநிலங்களிலிருந்து முதலீடுகளை ஈர்க்க அந்தந்த மாநிலங்களில் பெரிய அளவில் முதலீட்டாளர்கள் மாநாட்டை உ.பி. அரசு நடத்தி வருகிறது.

சென்னை மாநாடு: பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாட்டை முன்னிட்டு உ.பி. அரசு சென்னையில் தேசிய வர்த்தக அமைப்பான ஃபிக்கி உதவியுடன் முதலீட்டாளர்கள் மாநாட்டை கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தியது. இம்மாநாட்டில் தமிழகத்தின் சிறு, குறு தொழில்முனைவோர்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் என 500 பேர் கலந்து கொண்டனர்.

உ.பி. நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, சமூகநலத்துறை இணை அமைச்சர் அசிம் அருண், சிறு, குறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் அமித் பிரசாத், தொழில்துறை செயலர் அணில் சாகர் ஆகியோர் இம்மாநாட்டை உ.பி. அரசு சார்பாக நடத்தினர். இவர்களுடன் உ.பி.யில் ஐஏஎஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்களான மின்வாரியத்துறையின் முதன்மை செயலர் எம்.தேவராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் சி.செந்தில்பாண்டியன் ஆகிய இருவரும் முக்கியப் பங்காற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.