ஜனவரி 13ல் பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு எடுக்கும் முடிவு?

பொங்கல் பண்டிகைக்காக வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழர்களின் மிக முக்கியப் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகை முதன்மையானது. தைப் பிறப்பே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அது ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. திங்கள் கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு, லட்சக் கணக்கான பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவர்களுக்காக சிறப்புப் பேருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்புப் பேருந்துகள் நாளை முதலே இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், வார இறுதி நாட்களில் பொங்கல் பண்டிகை வந்திருப்பதால், மக்களின் நலன் கருதியும், ஊருக்குச் செல்வோருக்கு வசதியாகவும், ஒரே நேரத்தில் பலரும் ஊருக்குச் செல்வதைத் தவிர்க்கவும், வரும் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு முன்கூட்டியே அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கும், இதுவரை பேருந்து மற்றும் ரயில் என எதற்கும் முன்பதிவு செய்யாதவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:

இந்த ஆண்டு போகி பண்டிகை சனிக்கிழமையும், பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வோர் வெள்ளிக்கிழமை இரவு தான் செல்ல முடியும். அனைவரும் ஒரே நேரத்தில் சென்றால் நிச்சயமாக கூட்ட நெரிசல் ஏற்படும்.

வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தால் ஒரு நாள் முன்னாடியே ஊருக்கு செல்ல வசதியாக இருக்கும். மேலும், போகி மற்றும் பொங்கல் பண்டிகைகளை ஊரில் கொண்டாட முடியும். இல்லை எனில், போகி பண்டிகை அன்று தான் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.