ராமேஸ்வரம்: தமிழகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை இலங்கையில் அந்நாட்டு போலீசார் கைப்பற்றினர். தமிழக கடலோர பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு படகில், இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட போதைப்பொருட்கள் நடுக்கடலில் இலங்கை படகில் மாற்றப்பட்டு, புத்தளம் கல்பிட்டி கடற்கரைக்கு கடத்தல் நபர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை புலனாய்வு துறையினர், புத்தளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கல்பிட்டி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் இந்த போதை பொருட்களை மூன்று சக்கர வாகனத்தில் கடத்தல் நபர்கள் ஏற்றிச் செல்ல முயன்றனர். அப்போது புத்தளம் கல்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதிக்கு வந்த இலங்கை போலீசார், அவற்றை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் 2 பிளாஸ்டிக் பைகளில் தலா ஒரு கிலோ எடையில் ஐஸ் போதைப்பொருள் பவுடர் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடி.
போதைப்பொருளை கடத்திய கல்பிட்டி துரையடி மற்றும் மட்டக்குடி பகுதியை சேர்ந்த 2 பேரை இலங்கை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து இலங்கை பணம் ரூ.18 ஆயிரம், 2 மொபைல் போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் போதைப்பொருட்கள் தமிழகத்தில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். கைதான இருவரில் ஒருவர் இலங்கையில் பிரபலமான போதைப்பொருள் வியாபாரி எனவும், பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்றும் இலங்கை கல்பிட்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.