கோவை: “தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்துவரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக அஜித் படமா விஜய் படமா என்பது குறித்துதான் அதிகமாக விவாதிக்கப்படுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவையில் பசுமைத் தாயகம் சார்பில், நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் எனும் தலைப்பில் இன்று (ஜன.11) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தற்போது வரும் சினிமாக்கள் குறித்த விவாதங்கள் மக்களின் அரசியல் சார்ந்த விழிப்புணர்வை மடைமாற்றம் செய்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதற்கு ஊடகங்கள் மனது வைக்க வேண்டும். ஊடகங்கள் காட்சிப்படுத்துவதும், பேசுவதும்தான் மக்களிடம் சென்று சேர்கிறது.
கடந்த ஒரு மாதமாக இந்தப்படம் வருமா? அந்தப்படம் வருமா? அஜித் படமா, விஜய் படமா? எந்தப் பாட்டு வரும் என்பதைத்தான் ஒரு மாதமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது.
வேலைவாய்ப்பு கிடையாது, விவசாயிகள் பிரச்சினை. தற்போது கரும்பு பிரச்சினை. தமிழ்நாடு அரசு 6 அடி கரும்பைத்தான் கொள்முதல் செய்வோம் என்கிறது. அதிகமான ரசாயன உரங்கள் சேர்த்தால்தான் 6 அடிக்கு கரும்பு வரும். இயற்கையான உரங்கள் இட்டால் 5 அடிதான் வரும். அது என்ன கணக்கு 6 அடி கரும்புதான் வாங்குவோம் என்று சொல்வது.
அந்த 6 அடி கரும்புக்கு விவசாயிகள் எங்கு செல்வார்கள். என்ன கொள்கை இது? யார் அரசை தவறாக வழிநடத்துகின்றனர்? எனவே, முதல்வர் 5 அடியாக இருந்தாலும் கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். அதுவும் இந்த பன்னீர் கரும்பு பொங்கலுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும். வேறெதுக்கும் பயன்படுத்த முடியாது. இப்படி தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது” என்று அவர் கூறினார்.